இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

22. தாடங்க யுகளீபூத தபனோடுப மண்டலா

அம்பாளோட ரெண்டு காதுகள்ள தாடங்கங்கள் அதாவது தோடுகள் இருக்கு. நாம மனுஷா போட்டுக்கர காதணிகள் தங்கம் வைரம் இதால ஆனதா இருக்கும். ஆனா அம்பாளோட காதுகள்ள அப்படி சாதாரணமா இருக்குமா? ஒளி விட்டு பிரக்காசிக்கர சூரிய சந்திரர்கள்தான் அவளோட ரெண்டு தோடுகள்னு சொல்ரா வாக்தேவிகள்.  சூரியன் பகல்ல பிரகாசிக்கும், சந்திரன் இரவில் பிரகாசிக்கும். அம்பாள் தன் கழுத்த இப்படி அப்படி ஆட்டும்போது இரவும் பகலும் மாறி மாறி வரது போல அவளோட காதணிகள் ரெண்டும் மாறி மாறி ஒளிற்றதுன்னு சொல்லலாம் இல்லையா?

21. கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ணபூரண மனோஹரா

கதம்ப மலர்கள் மாதிரி குவிந்து விரிந்த காதுகள உடையவளாம் அம்பாள்.  தொலை தூரத்திலிருந்து வந்த சப்தத யானையின் பிளிறல் என்று நினைத்து சிரவண குமாரன் மீது அம்பெய்த தசரத ராஜாவின் கதையை இங்கு நினைச்சுப் பாருங்கோ. நாம கேட்கற சப்தம் தொலை தூரத்திலிருந்து வரது. அது நமது காதின் வழியே மனசுல போன உடனே அவ்வளவு பெரிய தூரத்தை கடந்து வந்து  அந்த மனத்தினால் சில வினாடிகளில் அந்த தூரத்தை பரவி நின்று அதனை உணர முடிகிறது என்றால் இது ஒரு பூரணத்வம் (முழுமை) தான். அப்படி அது கடந்து வந்த நேரத்தை (வினாடிகளை) கூர்ந்து கவனித்தால் அந்த வியாபகமான ஒரு நிலை திடப்படும். இப்படி ஐம்புலன்களையும் கூர்ந்து கவனிச்சா அதன் இடையீடான தொடர்பு ஒரு இன்ப அனுபவமா பரிணமிக்கும்.. அந்த அனுபவம் அனுபூதியாக இருக்கறது. அதன் பெயரே லலிதா அதாவது லலிதா அனுபூதி. வாக்தேவிகளின் இந்த நாமாக்களை பொருளுணர்ந்து அனுபவித்து சொன்னா இந்த அனுபூதி நமக்கு திடப்படும். 

20. தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸூரா

இருண்ட வான் வெளி ஒண்ண கற்பன பண்ணிக்கோங்கோ. அதுல அங்கொண்ணும் இங்கொண்ணுமா நட்சத்திரம் மின்னர்து. தாரான்னா நக்ஷ்த்திரம். அப்படிப்பட்ட அந்த நக்ஷத்திர ஒளிய மிஞ்சரது அம்பாள் தன் மூக்குல அணிஞ்சிருக்குற மூக்குத்தி.  கன்னியாகுமரியில் இருக்கற அம்பாள் மூக்குத்தி ஒளியைப் பார்த்து இது கலங்கரை விளக்குன்னு நினைச்சு மாலுமிகள் கப்பல நிருத்திடுவாளாம். அதனால அந்த பக்கத்து கதவ அடைச்சாளாம். இது நடந்த சம்பவம்.  இதுலேர்ந்து தெரியெர்து அம்பாள் மூக்குத்தி ஒளி எப்படிப்பட்டதுண்ணு. 

19. நவ சம்பக புஷ்பாப நாஸா தண்ட விராஜிதா

படம்
சம்பக மலர்ன்னு ஒரு புஷ்பம் இருக்கு. அதன் வாசனை சொல்லி மாளாது. ஆனா சீக்கிரமே வாடிடும். அதோட நிறமும் சந்தனம் மாதிரி இருக்கும்.  இந்த நாமாவுல வாக்தேவிகள் அம்பாளொட நாசி அதாவது மூக்கு அன்றலர்ந்த சம்பக மலர் போல இருக்குன்னு சொல்லரா.  மூக்கு வாசனைக்கு உகந்த மிருதுவான புலன் இல்லையா, அதனால வாடாத வாசனை மிகுந்த சந்தனம் போன்ற நெறத்தில அம்பாள் நாசி இருக்குன்னு சொல்றது ரொம்ப பொருத்தமா இருக்கு. உள்ளர்த்தமா பார்த்தா வாசன மிகுந்த இந்த சகல பிரபஞ்சமுமே அம்பாள் மூக்குன்னு சொல்லலாம். (இங்க வாசனைன்னா வினைகள்னு அர்த்தம் பண்ணிக்கணும்). இதத்தான் ரகசியமான சில கிரந்தங்கள் வாசன மிகுந்த இந்த பிரபஞ்சம் அம்பாள் வடிவம்ன்னு சொல்றது. அதனால வைராக்கியம் மிகுந்த ஞானிகளுக்கு இந்த பிரபஞ்சம் சூன்யமா தோணாது, அப்படிப்பட்ட மஹான்கள் இந்த பிரபஞ்சத்த அம்பாள் வடிவமா தன் நாசியால சுவாசிக்கிரான்னு சொல்லலாம்.

18. வக்த்ர-லக்ஷ்மி-பரிவாஹ-சலன் மீனாப லோசனா

அம்பாள் லலிதையொட முகம் அழகு வெள்ளமான தடாகம். குளம்னா மீன்கள் இருக்கணும். அந்த குளத்துல நீஞ்சர மீன்களா அம்பாளோட மை தீட்டிய அலைபாயர இரு கண்கள் இருக்காம். உள்ளர்த்தமா பார்த்தா ஆன்மஞான தடாகம்கர லலிதையின் முகத்தில (ஸவிகல்பம்/நிர்விகல்பம்கர) ரெண்டு சமாதி வடிவ கண்களான மீன்கள் நீஞ்சரதுன்னு சொல்லலாம். (சமாதியின் ரெண்டு நிலையைப் பத்தி பின்னால வரப்போற சில நாமாக்கள்ள விரிவா பார்ப்போம்)

17. வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா

வதனம்னா முகம். ஸ்மரன்னா மன்மதன். அம்பாளோட முகம் மன்மதன் வசிக்கற மங்கலமான க்ருஹமாம். க்ருஹம்னா அதுக்கு தோரண வாயில் இருக்கணுமே?  சில்லிகான்னா புருவங்கள். அந்த தோரணங்கள் அம்பாளோட வளைவான புருவங்கள்ங்கரா வாக்தேவிகள்.  சிருங்கார ரஸமான இந்த வர்ணன ரொம்ப அழகா இருக்கு. இப்படி அம்பாள தியானம் பண்ணுவோம்.

16. முகசந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா

 அம்பாளோட நெத்தி அரைவட்ட சந்த்திரனப் போல இருக்குன்னு முந்திய நாமாவுல பார்த்தோம். ம்ருகம்னா கஸ்தூரி மான். அந்த மான்லேர்ந்து வர கஸ்தூரிய அழகே உருவான அம்பிகை நெத்தில அணிந்திருக்கா.  இது எப்படி இருக்குன்னா சந்திரன்ல உள்ள களங்கம் போல இருக்குன்னு சொல்றா வாக்தேவிகள். சந்திரன் அம்பாள் உபாசகன். இருந்தாலும் அவனோட வாழ்க்கையில ஒரு களங்கம் இருக்குன்னு புராணங்கள் சொல்றது. இந்த உலகத்திலேர்ந்து பார்த்தாலும் நிலாவுல ஒரு களங்கம் போன்ற கறையைப் பார்க்கலாம். அப்படி இருந்தும் அம்பாள் அவனுக்கு தன் கருணையினால அருள தந்திருக்கா.  சந்திரன் நம்ம மனசோட அதிபதின்கரது சாத்திரம். நமது மனத்திலும் காமக் குரோதங்கள் என்கிற களங்கம் இருக்கு. இருந்தாலும் அவள வணங்கர நமக்கும் நிச்சயம் அருள் தருவாங்கரதில எந்த சந்தேகமும் இல்ல.

15. அஷ்டமீ சந்த்ர விப்ராஜத் அலிகஸ்தல சோபிதா

படம்
  அஷ்டமி திதிங்கரது எட்டாவதா வரும் திதி. சந்திரன்/நிலா வளர்பிறையில ஒவ்வொரு தினமும் வளர்ந்து பவுர்ணமி அன்னிக்கி முழு நிலவா பிரகாசிக்கும்கரது எல்லாருக்கும் தெரியும் . எட்டாவது நாள்ல/திதியில சந்திரன் அரை வட்டமாக இருக்கும். அம்பாளின் நெற்றி அரைவட்டமாக இருக்கிறது, எப்படின்னா சந்திரன் எட்டாவது நாள்ல அரைவட்டமாக பிரகாசிக்கறது போல உள்ளதுங்கரா வாக்தேவிகள்.  இப்படி தியானம் செய்தா அம்பாளோட அருளால நமது மனமும் பிரகாசிக்கும். சந்திரன பற்றின பல நாமாக்கள் லலிதா ஸஹஸ்ரநாமத்துல வரது. அதுல  சந்திரனுக்கும் அம்பாளுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி ஒவ்வொன்னா விளக்கமா பார்ப்போம்.